கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பயன்படுத்தி போட்டித் தேர்வு ஆர்வலர்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பயன்படுத்தி, சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் நடத்திய உதவி பொறியாளர் தேர்வில் 1 நபரும், TNPSC குரூப் 4 தேர்வில் 22 நபர்களும், SSC CGL தேர்வில் ஒரு நபரும், SSC MTS தேர்வில் ஒரு நபரும் வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும், பொது நூலக இயக்ககத்தின் முன்னெடுப்பில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினால் ஆறுமாதகால VFX 3D Design தொழிற் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த தொழிற்பயிற்சிக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் 162 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 35 மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களில் இரண்டு நபர்கள் சொந்தமாக VFX 3D Design தொழில் தொடங்கியுள்ளார்கள் மற்றும் இரண்டு நபர்கள் தனியார் நிறுவனத்தில் VFX 3D Designer ஆக பணியில் சேர்ந்துள்ளார்கள்.
மேற்படி, TNPSC, SSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் நடத்திய VFX 3D Design தொழிற் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 15.03.2025 அன்று காலை 10.00 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பல்வகைப் பயன்பாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் மரியாதைக்குரிய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி, TNPSC, SSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினால் நடத்தப்பட்ட ஆறுமாதகால VFX 3D Design பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்கள். இந்நிகழ்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர். வே.தினேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார், முனைவர். ஜெ. ஜெபஜோஸ்லின் அறிமுகவுரை ஆற்றினார் மற்றும் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திரு.வெ.சந்தான கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் நூலகர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொண்டனர்.